வீடியோ கேமுக்காக.. சக மாணவரை கடத்திய 3 சிறுவர்கள் - கடைசி ஆசையை நிறைவேற்றிவிட்டு கொன்ற கொடூரம்!
பள்ளி மாணவர்கள் சக மாணவரை கடத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடத்தல்
மேற்கு வங்கத்தில் 8-ம் வகுப்பு மாணவர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று தனது நண்பர்களை சந்தித்துவிட்டு வருவதாக கூறி சைக்கிளில் சென்றார். அங்கு சென்ற அந்த மாணவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை, பின்னர், அந்த சிறுவரின் பெற்றோருக்கு பணம் கேட்டு மிரட்டல் போன் கால் வந்தது.
இதனால் பதற்றமடைந்த பெற்றோர் கிருஷ்ணாநகர் காவல் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என்று புகாரளித்தனர். அதன்பிறகு விசாரணையில் அந்த சிறுவர் கொலை செய்யப்பட்டார் என்று தெரியவந்தது, இதனை வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
விசாரணையில் அதிர்ச்சி
இந்நிலையில், இந்த சிறுவரின் கொலை தொடர்பாக 3 மாணவர்களை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அந்த மூன்று மாணவர்களும் கேமிங் லேப்டாப் வாங்குவதற்காகக் கடத்தப்பட்ட மாணவனின் குடும்பத்திடம் மூன்று லட்சம் ரூபாய் கேட்டனர். ஆனால், மாணவனின் குடும்பத்தார் அவர்கள் கேட்டதைக் கொடுக்காததால், மூன்று பேரும் அந்த மாணவனைக் கழுத்து நெரித்துக் கொன்றனர்.
மாணவனைக் கொல்வதற்கு முன் அவரின் கடைசி ஆசையைக் கேட்ட மூன்று பேரும், அவருக்கு ரசகுல்லா, குளிர்பானங்கள் வாங்கிக்கொடுத்து கடைசி ஆசையை நிறைவேற்றியுள்ளனர்.
பின்னர், மாணவனின் சடலத்தை ஒரு பையில் அடைத்து, ஒத்துக்குப் புறமான இடத்தில் அதை வீசிச் சென்றுள்ளனர். இதனையடுத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி மூன்று மாணவர்களையும் கைது செய்தனர்.