குளிர் காய்ந்து கொண்டிருந்த சிறுமிகள்.. அடுத்தடுத்து உயிரிழந்த கொடூரம் - கிராமத்தில் நடந்தது என்ன?
குளிர் காய்ந்து கொண்டிருந்த போது சிறுமிகள் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்
குஜராத் மாநிலம் சூரத்தில் தொழிற்பேட்டை அதிகம் உள்ள பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமிகள் 4 பேர் மாலை தங்களின் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது குளிர் அதிகமாக இருந்ததால் நெருப்பு மூட்டிக் குளிர்காயத் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காகச் சிறுமிகள் அங்கிருந்த குப்பைகளைக் கூட்டி நெருப்பு மூட்டினர். அதன் பிறகு சிறுமிகள் 4 பேரும் நெருப்பைச் சுற்றி நின்று கொண்டு குளிர் காய்ந்து கொண்டிருந்தனர்.அப்போது திடீரென தலைச் சுற்றல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சிறுமிகள் 4 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் சிகிச்சை பலனின்றி 3 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிறுமிகள்
மற்றொரு சிறுமி தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்துவந்த காவல்துறையினர் உயிரிழந்த 3 சிறுமிகளின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
குப்பையில் வெளியான விசவாயுவைச் சுவாசித்ததன் காரணமாகச் சிறுமிகள் உயிரிழந்தார்களா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பிரேதப் பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே உறுதியான தகவல் தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.