நீச்சல் குளத்தில் குளிக்க சென்ற 3 இளம்பெண்கள்; நேர்ந்த விபரீதம் - விசாரணையில் திடுக் தகவல்!
நீச்சல் குளத்தில் குளிக்க சென்ற 3 இளம்பெண்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீச் ரிசார்ட்
கர்நாடகா, உச்சிலா கடற்கரைக்கு அருகே தனியார் பீச் ரிசார்ட் ஒன்று உள்ளது. இங்கு நிஷிதா, பார்வதி, கீர்த்தனா ஆகிய 3 இளம் பெண்கள் வார விடுமுறையையொட்டி வந்துள்ளனர். மூவரும் இறுதியாண்டு பொறியியல் படித்து வந்துள்ளனர்.
இரவு அங்கேயே தங்கி, மறுநாள் காலை 10 மணியளவில் அங்கிருந்த நீச்சல் குளத்தில் விளையாடியுள்ளனர். சிறிது நேரத்திற்குப்பின் அங்கு வந்து பார்த்த ரிசார்ட் ஊழியர்கள் பார்த்ததில், 3 பேரும் நீரில் செத்து மிதந்துள்ளனர். உடனே, போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இளம்பெண்கள் உயிரிழப்பு
தொடர்ந்து விசாரணையில் நீச்சல் குளத்தின் ஒரு பக்கம் குறைந்த ஆழமாகவும் மறுபக்கம் சுமார் 6 அடி ஆழமும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதை அறியாத பெண்கள் மூவரும் ஆழம் அதிகமான பகுதியில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
முதலில் ஒரு பெண் நீருக்குள் சிக்கியிருக்கலாம். அவரைக் காப்பாற்ற முயன்று குதித்த மற்ற இரு பெண்களும் அடுத்தடுத்து உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. உயிரிழந்த பெண்கள் மூவருக்கும் நீச்சல் தெரியாது. தற்போது பெண்கள் மது அருந்தியிருந்தார்களா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், ரிசார்ட்டில் நீச்சல் குளத்தின் ஆழம் குறித்து குறிப்பிடப்படவில்லை. சம்பவத்தன்று அப்பகுதியில் உயிர்காக்கும் பணியாளர் யாரும் இல்லை. எனவே, ரிசார்ட்டுக்கான உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.