29,000 இந்திய இளைஞர்கள் மாயம் - தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சென்றவர்களின் நிலை என்ன?
2 ஆண்டுகளில் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு வேலை தேடி சென்ற 29,000 இளைஞர்கள் மயமாகியுள்ளனர்.
சைபர் குற்றம்
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்திய வளர்ந்து வரும் நிலையில், நாளுக்கு நாள் அது தொடர்பான குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், 2024 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் இந்தியர்கள் மொத்தம் ரூ.1750 கோடியை இழந்துள்ளனர்.
இந்த பெரும்பாலான குற்றங்கள் கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம் போன்ற தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்தே நடைபெறுகிறது.
வெளிநாட்டு வேலை
மேலும் கடந்த 2 ஆண்டுகளில் விசிட்டிங் விசா மூலம் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சென்ற 29,000 இந்தியர்கள் மாயமாகியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வேலை தேடும் இளைஞர்களை சமூக வலைத்தளம், வேலைவாய்ப்பு இணையதளம் மூலம் தொடர்பு கொண்டு நினைத்துப் பார்க்க முடியாத சம்பளம், உயர் பதவிகள் என ஆசைகாட்டுகின்றனர்.
அதை நம்பி விண்ணப்பிக்கும் இளைஞர்களை சுற்றுலா விசாவில் வரும்படி அழைப்பு விடுக்கப்படுகிறது. விமான நிலையம் வந்து இறங்கியதுமே, அவர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி வைத்துக் கொள்ளும் மோசடி கும்பல் அதன் பிறகு சைபர் குற்றத்திற்கான பயிற்சியை தொடங்குகிறது.
ஏமாற்ற பயிற்சி
கிரெடிட் கார்டு மற்றும் வங்கிக் கணக்கு வைத்திருப்போரை தொலைபேசியில் அழைத்து அவர்களின் கணக்கில் இருந்து பணத்தை சுருட்டுவது, கிரிப்டோ கரன்சி வர்த்தகம் என்ற பெயரில் மோசடி, சமூகவலைதளங்களில் பெண் போல பேசி பழகி பணம் பறிப்பது எப்படி என பல வகையான சைபர் குற்றங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகின்றன.
அதன்பின் தினமும் எத்தனை பேரை ஏமாற்றி, எத்தனை லட்சம் பறிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இலக்கை அடையாதவர்களுக்கு கடும் தண்டனைகள் தரப்படுகின்றன. இதன் பின்னர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளைஞர்கள், தப்பிக்க நினைத்தாலும் அவர்களால் வெளியேற முடியவில்லை.
இதில் சிக்கியவர்களை மீட்க மத்திய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. வெளிநாடு சென்று மீண்டும் திரும்பாதவர்களின் தரவுகளைத் தருமாறு இந்தக் குழுவானது மாநில மற்றும் ஒன்றிய பிரதேச அரசுகளிடம் கோரியிருந்தது.
தமிழ்நாடு இளைஞர்கள்
அந்த தரவின் படி, மூன்றில் ஒருவர் பஞ்சாப், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இதில் 69 சதவிகிதம் பேர் அதாவது 20,450 பேர் தாய்லாந்து நாட்டிற்குச் சென்றிருக்கிறார்கள். இந்த மொத்த தொகையில் பாதிப் பேரின் (17,115) வயது 20-ல் இருந்து 39 வரையாக இருக்கிறது. இதில் 29,466 பேரில் 21,182 பேர் ஆண்கள்.
இவர்களில் பெரும்பாலானோர் டெல்லி விமானநிலையத்தில் இருந்துதான் சென்றிருக்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக மும்பை, கொல்கத்தா, கொச்சி விமானநிலையங்கள் உள்ளன.
விழிப்புணர்வு
இனிமேல் இதுபோன்ற மோசடிகளில் இளைஞர்கள் சிக்கவும் மத்திய அரசு விழிப்புணர்வு முயற்சியை கையிலெடுத்துள்ளது. வெளிநாட்டு வேலைக்குச் செல்வதாக இருந்தால், அது என்ன வேலைவாய்ப்பு, அது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமா?, நம்மைக் கூட்டிச் செல்லும் நபர் நம்பத் தகுந்தவரா? போன்றவற்றை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்ப்பது பாதுகாப்பானது.
வேலைக்காகச் செல்லும்போது, விசிட்டிங் விசாவைப் பயன்படுத்த முடியாது. 'விசிட்டிங் விசா மூலம் வேலைக்குச் செல்கிறீர்கள்' என்று யாராவது கூறினால் உடனடியாக உஷார் ஆகி விடுங்கள். மேலும், விசிட்டிங் விசாவில் வேலைகளுக்குச் சென்று, அந்த நாட்டு அரசிடம் பிடிபட்டால் சட்டரீதியான பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும்.
எந்த நம்பரிலிருந்து போன் கால் வந்தாலும் வங்கித் தகவல், OTP போன்ற முக்கிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பதே சிறந்தது.