ஒரே நேரத்தில் கூடிய விஜய் ரசிகர்கள் 25 ஆயிரம் பேர்... திணறிய பிரபல மால்..பாதியில் நிறுத்தப்பட்ட நிகழ்ச்சி - காரணம் என்ன?
சென்னையில் உள்ள மாலில் நடைபெற்ற நிகழ்ச்சியை காண நேற்று ஒரே நேரத்தில் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கூடியதால் போலீசார் நிகழ்ச்சியை பாதியில் நிறுத்தினர்.
நடிகர் விஜய் பிறந்த நாள் நிகழ்ச்சி
நேற்று நடிகர் விஜய்யின் 49-வது பிறந்த நாள் விழா தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் கொண்டாடினார்.
தமிழகத்தில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் தங்க மோதிரம் போட்டு கொண்டாடினர்.
இந்த நிலையில் நேற்று அவரது பிறந்த நாளை கொண்டாடும் வகையில், பிரபல இணையதள நிறுவனமான சினிஉலகம் சார்பில் வா தலைவா என்ற நிகழ்ச்சி சென்னை வடபழனியில் உள்ள நெக்சஸ் விஜயா மாலில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதில் பிரபல டிஜேவான டிஜே ப்ளாக் மற்றும் பிரபல பாடகி ஸ்ரீநிசா உள்ளிட்டோர் பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சி சரியாக மாலை 6 மணிக்கு தொடங்கியது.
திணறிய மால் - பாதியில் நிறுத்திய போலீசார்
இதை காண விஜய் ரசிகர்கள் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் திரண்டனர். இதனால் பாதுகாப்பு பணியில் இருந்த பவுன்சர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மட்டுமின்றி அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் திகைத்து நின்றனர்.
கட்டுக்கடங்காத கூட்டத்தால் நெக்சஸ் விஜயா மால் திணறியது. இதையடுத்து பாடல் நிகழ்ச்சியை ரசித்த விஜய் ரசிகர்கள் கூச்சலிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில் நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமானதால் அங்கு வந்த போலீசார் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு நிகழ்ச்சியை பாதியில் நிறுத்த கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் சல சலப்பு ஏற்பட்டது.
நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டதால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.