2,300 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரம் கண்டுபிடிப்பு - யாருக்கு சொந்தமானது?
2,300 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பழமையான மோதிரம்
இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேமில் 2,300 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது டேவிட் நகர தொல்பொருள் தளத்தில் அகழ்வாராய்ச்சி குழுவின் உறுப்பினரான தெஹியா கங்கேட் என்பவரால் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பழமையான தங்க மோதிரம் விலையுயர்ந்த சிவப்பு ரத்தின கல்லால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், இது ஹெலனிஸ்டிக் காலத்தில் வாழ்ந்த ஒரு குழந்தைக்கு சொந்தமானது என்றும் நம்பப்படுகிறது.
சிறு துரு கூட இல்லாமல் இந்த மோதிரம் இருப்பதாக இஸ்ரேல் தொல்பொருள் ஆணையம் (IAA) தெரிவித்துள்ளது. இந்த பழமையான தங்க மோதிரம் ஜெருசலேமில் வாழ்ந்த பண்டைய கால மக்கள் குறிப்பிடத்தக்க செல்வாக்குடனும், செழிப்புடனும் இருந்ததை உணர்த்துவதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.