நாடாளுமன்ற தேர்தலில் உலக சாதனை படைத்துள்ளோம் - தலைமை தேர்தல் ஆணையர் பெருமிதம்

India Election Lok Sabha Election 2024
By Karthikraja Jun 03, 2024 09:32 AM GMT
Report

நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

2024 நாடாளுமன்ற தேர்தல்

2024 நாடாளுமன்ற தேர்தல் 19 ஏப்ரல் தொடங்கி 1 ஜூன் வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. நாளை (4 ஜூன் 2024 ) வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில் இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்திய தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சாந்து உள்ளிட்ட உயரதிகாரிகள் உடன் இருந்தனர்.

election commision press meet

அப்போது தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் கூறியதாவது: “2024 நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தல் தொடங்குவதற்கு முன் மார்ச் 16ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தோம். தேர்தல் முடிந்துள்ள நிலையில் மீண்டும் சந்திக்கிறோம். இதற்கு இடையில், தேர்தல் ஆணையத்தின் 100 க்கு மேற்பட்ட அறிக்கைகள் மூலம் நாங்கள் எங்கள் தரப்பு தகவல்களை பகிர்ந்து கொண்டோம்.

97 கோடி வாக்காளர்கள், 1.50 கோடி தேர்தல் அதிகாரிகள், 10.50 லட்சம் வாக்குச்சாவடிகள், 68,763 கண்காணிப்புக் குழுக்கள், 4 லட்சம் வாகன பயன்பாடு என பிரம்மாண்டமான முறையில் இந்த தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில், 64.20 கோடி வாக்காளர்கள் வாக்களித்திருக்கிறார்கள். இது ஒரு உலக சாதனை ஆகும். 

இந்த 2 மாநிலங்களில் மட்டும் ஜூன் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை - ஏன் தெரியுமா?

இந்த 2 மாநிலங்களில் மட்டும் ஜூன் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை - ஏன் தெரியுமா?

மறு வாக்குப்பதிவு

27 ஐரோப்பிய நாடுகளின் வாக்காளர்களை விட இரண்டரை மடங்கு அதிகமாக வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர். இந்த நாடாளுமன்ற தேர்தலில் பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். 'தேர்தல் ஆணையத்தை காணவில்லை' என பகிரப்பட்ட மீம்ஸ்களை நாங்கள் பார்த்தோம். நாங்கள் எங்கும் காணாமல் போகவில்லை. இங்கு தான் இருக்கிறோம். 

voting in jammu kashmir

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலோடு ஒப்பிடுகையில், இந்த தேர்தலில் மிக குறைந்த எண்ணிக்கையிலே மறுவாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 2019 தேர்தலில் 540 இடங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த முறை 39 இடங்களில் மட்டுமே மறுவாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 27 மாநிலங்களில் மறுவாக்குப்பதிவு என்பதே இல்லை.

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவாக ஜம்மு காஷ்மீரில் அதிக வாக்காளர்கள் வாக்களித்துள்ளது பாராட்டுக்குரியது. மணிப்பூர் மாநிலத்தில் எந்த பெரிய கலவரமும் இன்றி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பெரிய வன்முறைச் சம்பவங்கள் எதையும் நாங்கள் காணவில்லை. வன்முறைச் சம்பவங்கள் நடந்த ஒரு சில இடங்களிலும் நாங்கள் துரிதமாகச் செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தோம்.

பணம் பறிமுதல்

தேர்தல் காலத்தில் ரூ.10,000 கோடி அளவில் பறிமுதல் செய்துள்ளோம். 2019 தேர்தலில் கைப்பற்றப்பட்ட பண மதிப்பை விட இது கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமாகும். பணம், இலவசங்கள், மதுபானங்கள் உள்ளிட்ட விநியோகம் இந்த முறை மிகப் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக வந்த 495 புகார்களில் 90% க்கும் அதிகமான புகார்கள் மீது தீர்வு காகாணப்பட்டுள்ளது. 

election commision vechicle check

தவறான தகவல்கள் பரப்பப்படுவதையும் தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்தி உள்ளது. இத்தகைய பகிர்வுகளை முன்கூட்டியே கண்டறிந்து அவற்றை சமூக ஊடகங்களில் பரவவிடாமல் தடுக்கும் பணிகளை எங்கள் நிபுணர்கள் குழு சிறப்பாக மேற்கொண்டது. வாக்கு எண்ணிக்கை தேர்தல் பரப்புரையில் விதி மீறல்களில் ஈடுபட்ட அரசியல் கட்சியினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். ஹெலிகாப்டர் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் சென்ற வாகனங்களில் சோதனை செய்தோம்.

நாளை நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்படும். துரிதமாக செயல்படுவது, வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவது, பதில்கூறும் பொறுப்பை ஏற்று செயல்படுவது என நாங்கள் செயல்பட்டுள்ளோம்." என்று கூறினார்.