நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல் - இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீர் ராஜினாமா!
இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அருண் கோயல்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு என தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தில் ஒரு தலைமை ஆணையர், 2 தேர்தல் ஆணையர்கள் இருப்பார்கள். தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பொறுப்பு வகித்து வருகிறது.
பரபரப்பு
தேர்தல் ஆணையர்களாக அருண் கோயல் மற்றும் அனுப் பாண்டே இருந்தனர். இதில் அனுப் பாண்டேவின் பதவிக்காலம் கடந்த மாதம் முடிந்து அவர் ஓய்வு பெற்றுவிட்டதால் ஒரு பதவி காலியாக இருந்தது.
இத்தகைய சூழலில் தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்திருப்பது விவாதங்களை எழுப்பியுள்ளது. மேலும், நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில், அருண் கோயல் ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.