இனி தஞ்சை பெரிய கோவிலில் கிரிவலம் செல்லலாம் - வெளியான அறிவிப்பு!
புரட்டாசி முதல் பௌர்ணமி நாளான செப்டம்பர் 17ஆம் தேதி தஞ்சை பெரிய கோவிலில் கிரிவலம் துவங்கப்பட்டது.
கிரிவலம்
பொதுவாக பௌர்ணமி அன்று கிரிவலம் வருவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு வாய்ந்ததாகும்.
பௌர்ணமி நாளில் சிவபெருமானை நினைத்து 14 கிலோ மீட்டர் மலையைச் சுற்றி வருவதன் மூலம் சிவபெருமானின் ஆசி கிடைப்பதோடு பாவங்கள் மற்றும் சகலதோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.
இந்த கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இந்த நிலையில் தஞ்சாவூர் பெரிய கோவிலிலும் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் கிரிவலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி , திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலைப் போல மாதந்தோறும் வரும் பௌர்ணமி நாளன்று மாலை 5 மணியிலிருந்து மறுநாள் காலை 6:00 மணி வரையும் கிரிவலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோவில்
கிரிவலப் பாதைக்காகப் பெரிய கோவிலைச் சுற்றி உள்ள நடைபாதைகள் சீரமைக்கப்பட்டு மின்விளக்குகள் பொருத்தப்பட்டு குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் புரட்டாசி முதல் பௌர்ணமி நாளான செப்டம்பர் 17ஆம் தேதி பெரிய கோவிலில் வெகு விமர்சையாக கிரிவலம் துவங்கப்பட்டது.
முன்னதாக பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றுத் தஞ்சை மாநகராட்சி அதிகாரிகள் கிரிவலம் நடத்துவதற்காக அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.