கள்ளக்குறிச்சி அருகே நகைக்கடை பூட்டை உடைத்து 281 சவரன் கொள்ளை!
கள்ளக்குறிச்சி அருகே நகைக்கடையின் பூட்டை உடைத்து 281 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நகைக் கொள்ளை
கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அருகே உள்ள புக்கிரவாரி புதூர் கிராமத்தில் லோகநாதன் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ குமரன் ஸ்வர்ண மகால் என்ற பெயரில் நகை கடை உள்ளது.
நேற்று விடுமுறை தினம் என்பதால் நகைக்கடை திறக்காமல் இருந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் தனது கடையை திறப்பதற்காக உரிமையாளரான லோகநாதன் நகைக்கடைக்கு சென்றுள்ளார்.
281 சவரன்
அப்போது நகைக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த லோகநாதன் கடைக்கு உள்ளே சென்று பார்த்த போது சுமார் 281 சவரன் தங்க நகைகள், 30 கிலோ வெள்ளி மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கப் பணம் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து நகைக்கடையின் உரிமையாளர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நகைக்கடைக்கு அருகில் உள்ள விவசாய நிலத்தில் காலியான நகைப் பெட்டிகள் சிதறி கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தீவிர விசாரணை
இதனையடுத்து விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு கொள்ளைக் கும்பல் குறித்த தடயங்களை சேகரிக்கும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பகலவன் தலைமையிலான போலீசார், நகைக்கடையில் கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.