20 பேர் இறப்பு? அனுமதியின்றி புதைக்கப்பட்ட உடல்கள்...மனநல காப்பகத்தில் நேர்ந்த அவலம்!
உரிமம் இல்லாத மனநல காப்பாகத்தில் 20 உடல்கள் புதைக்கப்பட்டுள்ளது.
மனநல காப்பகம்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள வெக்கி என்ற கிராமத்தில் அகத்தியன் என்பவர் மனநல காப்பகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் இந்த காப்பகம் எந்த உரிமமும் பெறாமல் நடத்தி வந்துள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் உரிய அடிப்படை வசதிகள் இல்லாததுடன், அங்கு பரமாரிக்கப்படுபவர்கள் குறித்து எந்த விவரங்களும் இல்லாமல் இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதைக்கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து புகார்கள் எழுந்த நிலையில், போலீசார் விசாரணையை நடத்த தொடங்கினர்.
20 பேர் இறப்பு?
அடுத்தடுத்த கட்ட விசாரணையில், மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றுத் திரிபவர்கள் பலரை அழைத்து வந்து காப்பகத்தில் ஊழியர்கள் தங்கவைத்தது தெரியவந்தது. கேரளாவில் இருந்தும் சிலர் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
முன்னதாக இங்கு தங்கியிருந்த 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் காப்பகத்திற்கு சொந்தமான நிலத்திலேயே அவர்களை புதைத்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதனையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் சண்முகம், நெலாக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காப்பகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள், மனநலம் பாதிக்கப்பட்ட 2 சிறுவர்கள் உட்பட 13 பேரை மீட்டனர்.