மேற்கு வங்கத்தில் 2 பெண்களை நிர்வாணமாக்கி தாக்கிய கொடூரம் - வெளியான அதிர்ச்சி வீடியோ!
மணிப்பூர் சம்பவத்தை போல் மேற்கு வங்கத்திலும் பெண்களை கொடூரமாக தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ச்சி சம்பவம்
மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் உள்ள பக்குவஹாட் பகுதியில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்களின் ஆடைகளை அவிழ்த்தும், இரக்கமற்ற முறையில் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இவர்கள் சந்தையில் பிக்பாக்கெட் அடித்ததாக சந்தேகத்தின் பேரில் பிடித்த பொதுமக்கள் அவர்களின் ஆடைகளை அவிழ்த்தும், காலணிகளை கொண்டும் சரமாரியாக தாக்கியுள்ளனர். ஆனால் இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட 2 பெண்கள் மற்றும் பெண் வியாபாரிகள் தரப்பில் இருந்து எந்த புகாரும் வரவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கண்டனம்
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதில் பாஜக ஐடி விங்க் பொறுப்பாளர் அமித் மாளவியா தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதில் அவர், ‛‛மேற்கு வங்கத்தில் திகில் காட்சி தொடர்கிறது. 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கி இரக்கமின்றி தாக்கப்பட்டுள்ளனர்.
இந்த விஷயத்தில் போலீசார் வாய்மூடி மவுனம் காக்கின்றனர். இந்த கொடூர சம்பவம் ஜூலை 19ம் தேதி காலையில் நடந்துள்ளது. மணிப்பூர் சம்பவம் மம்தா பானர்ஜியின் இதயத்தை உடைத்தது. அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் போலீஸ் துறையை கையில் வைத்திருக்கும் மம்தா இந்த சம்பவத்தில் செயல்பட்டு இருக்கலாம்.
ஆனால் அவர் எதுவும் செய்யவில்லை. அவரது சொந்த மாநிலத்தில் நடந்த இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை அவர் கண்டிக்கவில்லை. இதனால் ஏற்படும் வலி, வேதனையை அவர் வெளிப்படுத்தவில்லை. இது ஒரு முதல்வராக அவரது தோல்வியை எடுத்து காட்டுகிறது'' என்று கூறியுள்ளார்.