காலியான விராட், ரோஹித் இடம்; தயாராக இருக்கும் அந்த 2 வீரர்கள் - முன்னாள் வீரர் தகவல்!
ரோஹித், விராட் கோலியின் இடத்தை நிரப்ப 2 வீரர்கள் தயாராக இருப்பதாக முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.
இந்தியா அசத்தல்
இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது.
அதன் பிறகு 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. முன்னதாக 4-வது போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் 93 ரன்களும், சுப்மன் கில் 84 ரன்களும் விளாசி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தனர்.
இந்நிலையில், டி20 அணியில் ரோஹித், விராட் கோலியின் இடத்தை நிரப்ப, அதிரடியாக விளையாடும் ஸ்டைல் கொண்ட ஜெய்ஸ்வால் மற்றும் நிதானமாக விளையாடும் ஸ்டைல் கொண்ட கில் ஆகியோர் தயாராக இருப்பதாக இந்திய முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.
2 வீரர்கள் தயார்
அவர் கூறியதாவது "முதல் போட்டியில் தோற்றாலும் இந்திய அணி அங்கிருந்து வலுவான கம்பேக் கொடுத்தது. கடைசி வரை ஜெய்ஸ்வால் - கில் ஆகியோர் அவுட்டாகாமல் பார்ட்னர்ஷிப் அமைத்ததையும் அவர்கள் இடது - வலது கை ஜோடியாக இருப்பதையும் அடிக்கடி பேசி வருகிறோம்.
டி20 கிரிக்கெட்டில் ரோஹித், விராட் ஆகியோர் விளையாடப் போவதில்லை. எனவே, அந்த இடத்திற்கு இந்த வீரர்களும் தயாராக இருப்பதாக கருதுகிறேன். அதேபோல் இன்னும் சில வீரர்களும் தயாராக உள்ளனர்.
அவர்களில் சிறந்தவரை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது தேர்வாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. சீனியர் அணியை போலவே இந்த இளம் வீரர்கள் அதிரடியாக பேட்டிங் செய்து தொடரை வென்று காட்டியுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.