சிம் கார்டுகளில் இருந்து 191 கிராம் தங்கம் உருவாக்கிய நபர்
சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் பழைய சிம் கார்டுகளில் இருந்து தங்கம் உருவாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
சிம் கார்டுகளில் இருந்து தங்கம்
சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் உள்ள ஹுய்சோ நகரை சேர்ந்தவர் கியோவோ.
பழைய கழிவு பொருட்களை சுத்திகரித்து அதில் இருந்து மதிப்புமிக்க பொருட்களை உருவாக்கும் வேலையை செய்து வருகிறார்.

தான் சேர்த்து வைத்துள்ள டன் கணக்கான சிம் கார்டுகளை கொண்டு தங்கத்தை உருவாக்கியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?
முதலில் சிம் கார்டு மற்றும் சிப்களை சிறு துகள்களாக உடைத்து, ரசாயனங்கள் நிரப்பப்பட்ட பீப்பாய்களில் போட்டு, அரிப்பு, இடப்பெயர்ச்சி மற்றும் வெப்பமாக்கல் உள்ளிட்ட தொடர்ச்சியான செயல்கள் மூலம் தங்கத்தை திரவ வடிவில் பிரித்தெடுக்கிறார்.
இதனை வடிகட்டி 1,200 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் உருக்கி, 191 கிராம் தங்கக்கட்டியை உருவாக்கியுள்ளார்.
இதன் மதிப்பு சீனாவில் சுமார் 2 லட்சம் யுவான் ஆகும், தங்க விலை ஏறிக்கொண்டிருக்கும் சமயத்தில் குறித்த வீடியோ வைரலாக பலரும் பழைய சிம் கார்டுகளை தேடி அலைகின்றனர்.

ஆனால் இது ஆபத்தான ஒன்று என்றும், உரிமம் பெற்ற தொழில்முறை நிபுணர் என்பதால் இச்செயலை தன்னால் செய்ய முடிந்தது எனவும் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே அங்கீகாரம் இல்லாமல் இதனை செய்வது சீனாவில் சட்டவிரோதமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.