சிலிண்டர் வெடித்து 18 பேர் பலி - சிகிச்சை அளிக்க வார்டு கூட இல்லாத பரிதாபம்
கேஸ் சிலிண்டர் விபத்தில் சிகிச்சை அளிக்க முறையான ஐ.சி.யு. வார்டுகள் இல்லை என குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலிண்டர் விபத்து
பாகிஸ்தானில் பரீதாபாத் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில், குழந்தைகள், பெண்கள் உட்பட பலர் சிக்கி கொண்டனர். இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது..
இந்த விபத்தில் 14 பேர் பலி என்று இருந்த நிலையில், இவர்களில் அர்ஷத் என்பவரின் மகன் உமைர் (வயது 15), ஜீஷன் என்பவரின் மகள் அலிஷா (வயது 17), முபாரக் என்பவரின் மகன் அப்பாஸ் அலி (வயது 14) மற்றும் மெஹர் பாக்ரி என்பவரின் மகன் தோடா (வயது 25) ஆகிய 4 பேர் சமீபத்தில் உயிரிழந்தனர். இதனால், பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
ஜீஷனின் மகன் முகமது ஹசன் என்ற அலி ஹைதர் இந்த வெடிவிபத்தில் சமீபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது மகளும் உயிரிழந்து விட்டார். 5 வயது மகள் கின்ஜா சிகிச்சை பெற்று வருகிறார். முறையான அனுமதி இன்றி கியாஸ் சிலிண்டர் விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன என அரசு நிர்வாகம் கூறி வருகிறது.
சிகிச்சை
சட்டவிரோத கேஸ் மற்றும் சி.என்.ஜி. நிரப்பு நிலையங்களுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி நிறுவன உயரதிகாரிகளுக்கு காவல் துறை துணை ஆணையாளர் ஜெய்ன் உல் அபிதின் மேமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்ட விரோத விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்துறை செயலாளருக்கும் அவர் கடிதம் எழுதினார்.
இதேபோன்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதிய உபகரணங்கள், முறையான ஐ.சி.யு. வார்டுகள் உள்ளிட்டவை இல்லை என்று குற்றச்சாட்டு கூறப்படுகிறது. 20 ஆண்டுகளாக தீக்காயத்திற்கு சிகிச்சை அளிக்க போதிய கட்டிட வசதிகள் இல்லை என டாக்டர் தஹீர் தெரிவித்துள்ளார்.