நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு - 170ஐ கடந்த பலி எண்ணிக்கை!
நேபாளத்தில் கனமழை நீடிப்பதால் காத்மாண்டுவில் ஓடும் பாக்ரி நதியில் அபாய அளவை தாண்டி நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நேபாளம்
நேபாளத்தில் கடந்த வெள்ளிக் கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாகத் தலைநகர் காத்மாண்டுவில் 226 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.மேலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேபாளத்தின் தாடிங் மாவட்டத்தில் பேருந்து ஒன்று நிலச்சரிவில் புதைந்ததில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். பக்தபூர் நகரில் நிலச்சரிவால் வீடு இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்த நிலையில் சிலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். பலரைக் காணவில்லை.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் நேபாளம் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 3,000 வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து கனமழை நீடிப்பதால் காத்மாண்டுவில் ஓடும் பாக்ரி நதியில் அபாய அளவை தாண்டி நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வெள்ள பெருக்கு
இதனால் மலைகளில் ஏற்பட்ட மண் சரிவால் அங்கு மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டன. இதுவரை, 3,600-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள நிலையில்,170-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் பேரிடர் மீட்பு படையினர் ரப்பர் படகுகள், ஹெலிகாப்டர்களில் சென்று வெள்ள நீர் சூழ்ந்த வீடுகள் மற்றும் முக்கிய இடங்களில் தவிப்பவர்களை மீட்டு வருகின்றனர்.