16 வயது சிறுமி 110 நாள் உண்ணாவிரதம் இருந்து அபூர்வ சாதனை - குவியும் பாராட்டு!
16 வயது ஜெயின் சிறுமி 110 நாள் உண்ணாவிரதம் இருந்து சாதனை படைத்துள்ளார்.
உண்ணாவிரத சாதனை
மும்பை மேற்கு கண்டிவலி, ஜெயின் சமூகத்தை சேர்ந்த தம்பதி ஜிகர் ஷா-ரூபா ஷா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகளான கிரிஷா (16) என்ற சிறுமி 110 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து அபூர்வ சாதனை படைத்துள்ளார்.
இதனை கொண்டாட கிரிஷாவின் குடும்பத்தினர் பிரம்மாணட விழா நடத்தினர். அதில் ஆன்மீக குருக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்கள் "சாதுக்கள் சிலர் மட்டுமே செய்யக்கூடிய சாதனையை கிரிஷா நிகழ்த்தியுள்ளது அசாதாரணமானது" என அந்த சிறுமியை பாராட்டியுள்ளனர்.
இந்த உண்ணாவிரத சாதனை தொடர்பாக சிறுமி கிரிஷாவின் தாயார் ரூபா ஷா கூறுகையில் "கிரிஷா ஜூலை 11ம் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கினார். முதலில் 16 நாட்கள் மட்டுமே உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார்.
குடும்பத்தினர் நெகிழ்ச்சி
இந்த கால கட்டத்தில் கிரிஷாவுக்கு உடலில் எந்த பிரச்சினையும் ஏற்படாததால் அவளது ஆன்மீக குருவான முனி பத்மகலாஷ் மகராஜிடம் அனுமதி பெற்று 110 நாட்களுக்கு தனது உண்ணாவிரத்தை நீட்டித்துக் கொண்டார்.
இந்த காலகட்டத்தில் கிரிஷா காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை காய்ச்சிய தண்ணீரை மட்டுமே பருகுவாள். 110 நாட்கள் உண்ணாவிரதத்தில் கிரிஷாவின் எடை 18 கிலோ குறைந்துள்ளது’’ என்று கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக சிறுமி கிரிஷாவின் குடும்பத்தினர் கூறுகையில் "கிரிஷா 11-ம் வகுப்பு படிக்கிறார்.
கிரிஷா உண்ணாவிரதம் தொடங்கிய பிறகு மன வலிமை பெற மத நூல்கள் மற்றும் பிரார்த்தனைகளில் கவனம் செலுத்தி உள்ளார். மன ஒருமைப்பாட்டுடன் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை கிரிஷாவின் செயல் எடுத்துக்காட்டியுள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.