12ம் வகுப்பு மாணவர் அடித்தே கொலை; எங்கள் நிலை யாருக்கும் வரக்கூடாது - கதறிய பெற்றோர்
12ம் வகுப்பு மாணவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவர் கொலை
கும்பகோணம், பட்டீஸ்வரம் பகுதியில் அரசு அறிஞர் அண்ணா மாதிரி மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு இனாம்கிளியூர் பகுதியைச் சேர்ந்த கவியரசன் என்ற மாணவன் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இவருக்கும் அதே பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் 11ஆம் வகுப்பு மாணவன் மூக்கில் காயம் ஏற்பட்டு சிகிச்சை எடுத்துள்ளார். தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரில், மாணவர்களின் நலன் கருதி போலீஸார் வழக்குப்பதிவு செய்யாமல்,
இரு தரப்பினரின் பெற்றோரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, மாணவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில், கவியரசன் தரப்புக்கும், 11-ம் வகுப்பு மாணவன் தரப்பை சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், மாலை சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு பள்ளியிலிருந்து கவியரசன் தன் நண்பர்களுடன் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
தாய் கலக்கம்
அப்போது 1-ம் வகுப்பு மாணவர்கள் கவியரசன் உள்ளிட்ட 12-ம் வகுப்பு மாணவர்களைத் தாக்கியுள்ளனர். அதில், சரிந்து விழுந்த கவியரசனை சக மாணவர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்நிலையில் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதுடன் கவியரசனைத் தாக்கிய 11-ம் வகுப்பு மாணவர்கள் 15 பேரைக் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். தற்போது இதுகுறித்து பேசிய கவியரசன் தாய் ராஜலட்சுமி,
“என் புள்ள சிரிச்ச முகத்துடன் இருப்பான், எந்த வம்பு தும்புக்கும்போக மாட்டான். அப்படிபட்டவனை பள்ளியிலிருந்து வரும் போது 25 மாணவர்கள் சேர்ந்து அடித்துள்ளனர். துவண்டு விழுந்தவனை மிதித்து அடித்துக்கொன்று விட்டனர். நான்கு நாளா தவித்து நின்று கொண்டிருக்கிறோம்.
அரசு, பள்ளி கல்வித்துறை அமைச்சரும், ஏன் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளும் எங்களுக்கு ஆறுதல் சொல்லவில்லை, ஆறுதலாக நிற்கவில்லை. நாங்கள் எங்க மகனை இழந்து நிற்கிறோம்; எங்க நிலை இனி யாருக்கும் ஏற்படக்கூடாது” எனக் கலங்கினார்.