15 இந்தியர்களுடன் கப்பல் கடத்தல்; இறங்கிய கடற்படை - எகிறிய கொள்ளையர்கள்!
15 இந்திய பணியாளர்களுடன் சரக்கு கப்பல் ஒன்று கடத்தப்பட்டது.
சரக்கு கப்பல் கடத்தல்
வடக்கு அரபிக் கடலில் கடந்த சில நாட்களாக கடற்கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சோமாலியா கடற்கரையோரம் பயணித்துக் கொண்டிருந்த எம்வி லிலா நார்ஃபோல்க் என்ற சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் திடீரென கடத்திச் சென்றனர்.
மேலும், கடத்தப்பட்ட கப்பல் லைபீரிய கொடியை ஏந்தியிருந்ததாகவும், அதில் இந்தியாவைச் சேர்ந்த 15 பணியாளர்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மீட்ட கடற்படை
அதனைத் தொடர்ந்து, ஐ.என்.எஸ். சென்னை போர்க் கப்பல், கடற்படை விமானங்கள் உடனடியாக கடத்தப்பட்ட கப்பல் இருப்பிடத்தை நோக்கி விரைந்து தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின், கப்பலுக்குள் இறங்கினர். ஆனால், அங்கு கடற்கொள்ளையர்கள் யாரும் இல்லை. கடற்படையினர் வருவதற்குள் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
முழுமையான சோதனைகளுக்கு பின் கப்பல் புறப்பட்டது. அதில் இருந்த 15 இந்திய மாலுமிகளும், பிலிப்பைன்சை சேர்ந்த 6 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கடத்தப்பட்ட கப்பல் ஏடன் வளைகுடாவில் இந்திய போர் கப்பல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.