அவமானப்படுத்திய அமைச்சர் செஞ்சி மஸ்தான்.. ஒரே நேரத்தில் 13 கவுன்சிலர்கள் திடீர் ராஜினாமா!
அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் அவரது மருமகன் தலையீட்டால் அதிருப்தி அடைந்த கவுன்சிலர்கள் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.
செஞ்சி மஸ்தான்
மருமகன் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சராக செஞ்சி மஸ்தான் இருந்து வருகிறார். திண்டிவனம் நகராட்சியில் அமைச்சர் மஸ்தானின் மருமகனின் தலையீடு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்து 13 தி.மு.க கவுன்சிலர்கள் பிரிந்து தனியாக செயல்பட்டு வருகின்றனர்.
நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நகரமன்ற கூட்டத்தில் பேசிய தி.மு.க அதிருப்தி கவுன்சிலர்கள், தங்கள் வார்டுகளுக்கு அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படுவதில்லை என்றும் நகர்மன்றம் சுதந்திரமாக செயல்படவில்லை.
வேறொரு அழுத்தத்தில் இருக்கிறது. இந்த நகர்மன்றம் நம்பிக்கையை இழந்திருக்கிறது. பொதுமக்களுக்கு எந்த நலத்திட்டமும் செய்ய முடியவில்லை. நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்றும் தெரிவித்தது.
ராஜினாமா
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கவுன்சிலர்கள், "நாங்கள் பதவிக்கு வந்து 18 மாதம் ஆகிறது. நகராட்சி எங்கள் வார்டுகளுக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை. நாங்கள் ஏதாவது கேட்டால் அமைச்சர் மாப்பிள்ளையை கேளுங்கள்' என சொல்கிறார்கள்" என்றனர்.
மேலும் "அமைச்சர் மஸ்தான், எங்களை 'ராஜினாமா செய்துவிட்டு போகச் சொல்கிறார். எங்களை மிகவும் அவமானப்படுத்துகிறார்கள். எதிர்த்து கேள்வி கேட்டால், தகாத வார்த்தைகளைப் பேசி அசிங்கப்படுத்துகிறார்கள். முதலமைச்சரை சந்தித்து முறைப்படி ராஜினாமா கடிதம் கொடுப்போம்.
அவர் விசாரித்து சொல்லும் அறிவுரையை ஏற்று செயல்படுவோம். அப்படியான பதில் வரும் என காத்திருக்கிறோம். இல்லையெனில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்"என்று கூறியுள்ளனர்.