லட்சத்தில் 13.6 குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு..வெளியான அதிர்ச்சி தகவல் - எங்க தெரியுமா?
சென்னையில் உள்ள அதிக குழந்தைகள் ரத்தம் சார்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை
சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சார்பில் புற்றுநோய் பதிவேடு தொடங்கப்பட்டது. இதற்காகத் தமிழக அரசு சார்பில் புற்றுநோய் ஆராய்ச்சி மைய இணை இயக்குநர் ஆர்.சுவாமிநாதன் தலைமையில் மருத்துவக் குழு அமைக்கப்பட்டது.
தொடர்ந்து இதற்கான ஆராய்ச்சிகள் இந்த நிலையில் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள புற்றுநோய் தரவுகளைச் சேகரித்து இந்த மருத்துவக் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
அதில், சென்னையில் மொத்தம் 17 மருத்துவமனைகளில் கடந்த 2022 ஆம் ஆண்டு 241 குழந்தைகள் புதிதாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.குறிப்பாகச் சென்னை மக்கள் தொகையில் 10 லட்சத்தில் 136.3 குழந்தைகளுக்கு (லட்சத்தில் 13.6 பேர்) புற்றுநோய் இருந்தது.
புற்றுநோய்
ஆண் குழந்தைகளின் பாதிப்பு விகிதம் 10 லட்சத்துக்கு 152.7 ஆகவும், பெண் குழந்தைகளின் விகிதம் 118.5 ஆக இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் 139 ஆண் குழந்தைகள், 102 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இவர்களில் ரத்தம் சார்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களே அதில் அதிகம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் நிணநீர் மண்டல புற்றுநோய், சார்கோமா எனப்படும் மென் திசு புற்றுநோய், எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.