ரன்னிங் ரேஸில் ஓடும்போதே மயங்கி உயிரிழந்த 12ம் வகுப்பு மாணவர், அதிகாரிகளால் தாமதம் - கதறி அழுத தாய்!
ஓட்டப்பந்தயத்தில் ஓடும்பொழுது மயங்கிய மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயங்கிய மாணவர்
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள காட்டுச்சேரி சமத்துவபுரம் அரசு விளையாட்டு மைதானத்தில் மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில் செம்பனார்கோவில் தாமரை மெட்ரிக்பள்ளியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவர் ரிஷிபாலன் என்பவர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டார்.
அதில் அவர் ஓடி கொண்டிருக்கும்பொழுது திடீரென மயங்கி விழுந்தார், அப்பொழுது அவர் சம்பவ இடத்திலேயே மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அதிகாரிகளால் தாமதம்
இந்நிலையில், போட்டியை தொடங்கி வைத்த கல்வித்துறை அதிகாரிகள் 3 மணி நேரம் தாமதமாக வந்ததால் கடும் வெயிலில் தங்கள் மகனைக் காக்க வைத்ததாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். அந்த மாணவர் பிற்பகல் 3 மணிக்கு மயங்கி விழுந்ததாகவும் ஆனால் மாலை 6 மணியளவில் தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக அந்த மாணவரின் பெற்றோர் கூறியுள்ளனர்.
மேலும், தங்கள் மகன் மயங்கியது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்றும் இந்த நிலைமை எந்த மாணவர்களுக்கும் ஏற்பட கூடாது என்று அந்த மாணவரின் தாய் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.