தமிழகத்தில் 4 பேருக்கு BA4, 8 பேருக்கு BA5 வகை கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ளாதாக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் பாதிப்பு
இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக டெல்லி, உத்தரபிரேதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, உள்ளிட்ட 5 மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.
தமிழகத்தில், தலைநகர் சென்னையில் ஒருநாள் பாதிப்பு நேற்று முந்தினம் 81 ஆக பதிவான நிலையில், நேற்று 61 ஆக குறைந்தது. அதேபோல், தமிழகத்தில் நேற்றுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 55 ஆயிரத்து 976- ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் புதிய வகை கொரோனா
இந்நிலையில்,தமிழகத்தில் தற்போது புதிய வகை கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ளாதாக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ்சின் உருமாறிய தொற்றின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். அந்த வகையில், தமிழ்நாட்டில் பி.எ.4 வகை கொரோனா தொற்றால் 4 பேரும், பி.ஏ.5 வகை கொரோனா தொற்றால் 8 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், கடந்த வாரம் இவர்களுக்கு தொற்று உறுதியான நிலையில், மருத்துவமனையில் சிக்கிப்பெற்று வந்ததாகவும் தற்போது 12 பேரும் பாதிப்பிலிருந்து குணமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும், உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 12 பேரும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் நாவலூர் பகுதியில் பி.ஏ.4 ரக உருமாறிய கொரோனா தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
ராதாகிருஷ்ணன் பேட்டி
இதை தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செய்தியாளர்களுக்கு மக்கள் நலவாழ்வுத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், சென்னை, காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.
இதனால் மக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்து நடந்துக்கொள்ளவேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்துவது அவசியம் என்றும் கூறினார்.