ஆசைப்பட்டு சவர்மா சாப்பிட்ட மருத்துவ மாணவர்கள்.. ஒரே வாந்தி, மயக்கம் - 12 பேர் அவதி!
கல்லூரி மாணவர்கள் சவர்மா சாப்பிட்டதால் வாந்தி மயக்கத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொண்டாட்டம்
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவருக்கு நேற்று பிறந்தநாள். இதனால் இவரது நண்பர்கள் இணைந்து கொண்டாடியுள்ளனர். பின்னர், மாணவ மாணவிகள் 12 பேர் நேற்று இரவு நாமக்கல் பரமத்தி சாலையில், பழைய நகராட்சி அலுவலகம் அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் சவர்மா சாப்பிட்டுள்ளனர்.
அப்பொழுது திடீரென அந்த 12 பேருக்கும் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அந்த சவர்மா கெட்டுப்போன சிக்கனால் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த மாணவர்கள் அனைவரும் இன்று காலை நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் வருகை
இந்நிலையில், பாதிகப்பட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா, அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து மாணவ, மாணவிகளிடம் நலம் விசாரித்தார்.
அவர் தரமில்லாத உணவு வழங்கிய அந்த உணவகத்திற்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் இவரது உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் அந்த ஹோட்டலை பூட்டி சீல் வைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது, மேலும், இந்த உணவகத்தில் சாப்பிட்ட சில மக்களுக்கு இதே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.