புளோரிடாவை உலுக்கிய மில்டன் புயல்... புரட்டி போட்ட சூறாவளியால் 11 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கிய சூறாவளியில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தையும், ஜார்ஜியா மற்றும் தெற்கு கரோலினாவின் சில பகுதிகளையும் , மில்டன் சூறாவளி தாக்கியது. இது 195 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் 41 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இது, ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கு பெய்யக்கூடிய மழையின் அளவாக பார்க்கப்படுகிறது.
புளோரிடாவில் 30 லட்சம் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளன.மில்டன் புயல் காரணமாக புளோரிடாவை சேர்ந்த 11 பேர் இதுவரை உயிரிழந்ததாகவும், 80 ஆயிரம் பேர் முகாம்களுக்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சூறாவளி
இதனிடையே புளோரிடா அவசரகால மேலாண்மை பிரிவு அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில், “மில்டன் புயல் மிகவும் ஆபத்தானது. மக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கவும்.
ஜன்னல் மற்றும் கதவுகளுக்கு அருகே நிற்காமல் பாதுகாப்பான தூரத்தில் இருக்க வேண்டும். புயல் தொடர்ந்து நகர்ந்து வருவதால் அச்சுறுத்தலான பாதிப்புகள் வியாழக்கிழமை வரைத் தொடரும்” என்று தெரிவித்துள்ளது.