104 வயதில் முதியவருக்கு கிடைத்த ஜாமீன் - சிறையை மிஸ் செய்வதாக உருக்கம்
104 வயதில் ஜாமீனில் வெளியே வந்த முதியவர் சிறையை மிஸ் செய்வதாக தெரிவித்துள்ளார்.
சகோதரர் கொலை
மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தை சேர்ந்தவர் ரசிக் மொண்டல்(rasik chandra mandal). நிலம் தொடர்பாக அவரது சகோதரர் சுரேஷ் மண்டலுடன் பல ஆண்டுகளுக்கு முன்பே மோதல் இருந்து வந்துள்ளது.
இதனையடுத்து 1988 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சுரேஷ் தனது வீட்டில் சுட்டு கொலை செய்யப்பட்டார். இதில் ரசிக் மற்றும் ஜிதேன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆயுள் தண்டனை
1994 ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் இருவரும் பிணையில் வெளியே வந்த போது, ஜிதேன் மரணமடைந்து விட்டார். ரசிக் மீண்டும் சிறை சென்றார்.
தண்டனையை எதிர்த்து ரசிக் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்துள்ள நிலையில், நவம்பர் 29 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அவருடைய மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது.
104 வயதில் ஜாமீன்
அந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் ரசிக் சந்திராவை இடைக்கால பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது. வெளியே வந்த ரசிக் அளித்த பேட்டியில், "எத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்தேன் என்று எனக்கே தெரியாது. நான் வீட்டிற்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆனால் சிறை வாழ்க்கையை மிஸ் செய்வேன். இனி முழு நேரத்தையும் செடிகளை வளர்ப்பதற்கும் பேரக்குழந்தைகளுடன் நேரத்தை செலவிடவும் விரும்புகிறேன். விரைவில் முழு விடுதலை கிடைக்கும் என நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.
ரசிக் கைது செய்யப்பட்ட போது அவரது வயது 68 ஆகும். தற்போது அவருக்கு 104 வயதாகி உள்ளது. 38 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ளதால் தனது வயதை கணக்கில் கொண்டு விடுதலை அளிக்க கோரிக்கை வைத்துள்ளார்.