சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் - 100% நிறைவடைந்து விட்டன - ராதாகிருஷ்ணன்..!
சென்னையில் மழை வெள்ளத்திற்கு பிறகு எந்த தொற்று நோயும் பரவவில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு
சென்னை அன்னை சத்யா நகரில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கொசுத் தடுப்பு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இன்று நேரில் பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மழை வெள்ளத்திற்கு பிறகு ஏற்படும் நோய் பரவலை தடுப்பதற்காக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டு, ஏழை, எளிய மக்கள் இருக்க கூடிய பகுதிகளில் தொடர்ந்து மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது என்றார்.
சென்னையில் கடந்த 23 ஆம் தேதி வரை மட்டுமே 1.38 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் அளித்த அவர், 9,969 மருத்துவ முகாம்களில் 5 லட்சத்து 64 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
100 சதவீத மழைநீர் வடிகால்..
மழை வெள்ள பாதிப்பிற்கு பிறகு சென்னையில் எந்த தொற்று நோயும் பரவவில்லை என்றும் பொதுமக்களுக்கு மருத்துவ விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், சென்னையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் உள்ள மக்களுக்கு சுத்தமான பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக கூறி, சென்னை மாநகராட்சியின் முக்கிய பகுதிகளில் 100 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துவிட்டன என்றும் விளக்கமளித்துள்ளார்.