நேரில் பாத்துட்டாவது நிவாரணம் கொடுப்பாங்க'னு நம்புவோம் - அமைச்சர் உதயநிதி பேட்டி
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தென்தமிழக வெள்ள பாதிப்புகளை பார்வையிட தமிழகம் வரவுள்ள நிலையில், அது குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகம் வருகிறார்
மிக்ஜாம் புயலை அடுத்து கடந்த 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி போன்ற மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து, தமிழக அரசு மத்திய அரசிடம் நிவாரண நிதி கோரியிருந்தது. அது குறித்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்பு பகுதிகளை நேரில் பார்வையிடவுள்ளார்.
உதயநிதி கருத்து
அதே நேரத்தில், தமிழக அரசு சார்பில் நெல்லையில் மழையால் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண தொகையும் கால்நடைகளை இழந்தவர்களுக்கும், முழுமையாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரண தொகையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது வருமாறு தமிழக முதல்வர் நிவாரண உதவிகளை அறிவித்து கடந்த 10 நாட்களாக அனைத்து அமைச்சர்கள், அனைத்து மக்கள் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் என அத்தனை பேரும் பணிகளை செய்து வருவதாகவும் இவர்கள் தேவை இல்லாமல் அரசியல் பேசி வருவதாக தெரிவித்தார்.
என்ன பாதிப்பு இருக்கிறது என்பதை பார்க்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வர இருக்கிறார். பாதிப்புகளை அவர் நேரில் ஆய்வு செய்த பின்பு உரிய நிதி கொடுப்பார்கள் என நம்புகிறோம்'' என பேசியிருக்கிறார்.