வதந்தியால் ரயிலில் இருந்து குதித்த பயணிகள் - மற்றொரு ரயில் மோதி 10 பேர் பலி
ரயிலில் இருந்து குதித்த பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதி 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்து வதந்தி
உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து, மகாராஷ்டிரா மாநிலம், மும்பைக்கு பயணிகளுடன் புஷ்பக் எக்ஸ்பிரஸ்(Pushpak Express) சென்று கொண்டிருந்துள்ளது.
இந்நிலையில் இன்று(22.01.2025) மாலை வடக்கு மகாராஷ்டிராவின் ஜல்கான்(Jalgaon) மாவட்டத்தில் உள்ள பச்சோரா ரயில் நிலைய,ம் அருகே ரயில் செல்லும் போது, ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவியுள்ளது.
மோதிய ரயில்
இதனால் அச்சமடைந்த பயணிகள் சிலர் அபாய சங்கிலியை இழுத்ததோடு, ரயிலில் இருந்து குதித்து அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென அந்த தண்டவாளத்தில் வந்த கர்நாடக எக்ஸ்பிரஸ்(Karnataka Express) பயணிகள் மீது மோதியது.
இதில் சிலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், பலரும் படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியினை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் தற்போது வரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. பலரும் படுகாயமடைந்துள்ள நிலையில் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.