முனியப்பன் கோயில் உண்டியலில் ரூ.90 கோடி - அதிர்ந்த அறநிலையத்துறை அதிகாரிகள்!
கோயில் உண்டியலில் ரூ.90 கோடிக்கான காசோலை இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முனியப்பன் கோயில்
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பிலியனூர் அக்ரஹாரம் பகுதியில் பிரசித்தி பெற்ற முனியப்பன் கோயில் உள்ளது. இந்த கோவிலின் முன் பகுதியில் பக்தர்கள் காணிக்கையாக வைக்கும் திரிசூலங்கள் உள்ள இடத்தில் அன்னதானம் உண்டியல் உள்ளது.
இந்த உண்டியல் காணிக்கை மாதந்தோறும் அறநிலையத் துறை அதிகாரிகள் முன்னிலையில் எண்ணப்பட்டு கோயில் கணக்கில் வரவு வைக்கப்படும். அந்தவகையில் கடந்த 2 நாட்களுக்கு முன் அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டுள்ளது.
ரூ.90.42 கோடி
அப்போது உண்டியலில் ரூ.90.42 கோடிக்கான (ரூ. 90,42,85,256) காசோலை இருந்துள்ளது. இதைப் பார்த்து இன்ப அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், தற்போது அதன் உண்மை தன்மை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், தருமபுரியில் உள்ள சவுத் இந்தியன் வங்கியில் கணக்கு வைத்துள்ள மகேந்திரன் என்பவரின் பெயரில் அந்த காசோலை போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய தொகை குறிப்பிட்டு போடப்பட்ட காசோலை தருமபுரி பகுதியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.