மிருதன் பட பாணியில் மான்களுக்கு பரவும் ஜாம்பி நோய் - மக்களுக்கும் பரவலாம் என எச்சரிக்கை
கனடாவில் உள்ள மான்கள் அரிய நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ள சம்பவம் அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹாலிவுட் திரைப்படங்களில் நாம் ஜாம்பி என்ற வகை நோய் பற்றி பார்த்திருப்போம். குறிப்பிட்ட அந்த நோய் ஒவ்வொரு மனிதராக பரவி அவர்களை மிகவும் முரட்டுத்தனமாக நடக்க வைக்கும். தமிழில் கூட ஜெயம் ரவி நடிப்பில் வெளியான மிருதன் படமும், யோகிபாபு நடிப்பில் வெளியான ஜாம்பி படமும் அந்த நோயின் தாக்கம் பற்றி பேசியிருக்கும்.
அந்த வகையில் Chronic Wasting Disease என்றழைக்ககூடிய இந்நோய் மூளையின் ப்ரியான் என்னும் புரத அமைப்பை பாதிக்கக்கூடியது என்றும், இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு, நடத்தையில் மாற்றங்கள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
கனடாவில் உள்ள ஆல்பர்ட்டா மற்றும் சஸ்காட்செவன் போன்ற பகுதிகளில் உள்ள மான்களை இந்நோய் பாதித்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. மரை மான், கலை மான், சதுப்புநில மான், கட மான் போன்ற மான் வகைகளை பாதிக்கக்கூடியதுஎன தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பாதிக்கப்பட்ட மான்களின் இறைச்சியை சாப்பிட்டாலோ, மான்களை வேட்டையாடுபவர்கள் சடலத்தை சரியான முறையில் கையாளத் தவறினாலோ இந்நோயால் மனிதர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதன்முதலில் அமெரிக்காவில் 1960களில் கண்டறியப்பட்ட இந்த தொற்று கனடாவில் முதன்முதலில் 1996 ஆம் ஆண்டு தான் கண்டறியப்பட்டது. இந்நோயால் உமிழ்நீரும், சிறுநீரும் அதிகளவில் சுரந்து கொண்டே இருக்கும். மூளை தன் கட்டுப்பாட்டை இழந்து, அசாதாரண செயல்களைச் செய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.