கர்ப்பிணிகளே உஷார்...கேரளாவை மீண்டும் அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்
கேரளாவில் மீண்டும் ஜிகா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.
கொரோனா 2வது அலையில் இருந்து இந்தியா தற்போது தான் மெல்ல மீண்டு வருகிறது. ஆனால் கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்னர் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 30க்கும் மேற்பட்டோருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.
அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்நிலையில் தற்போது மீண்டும் கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு தலைதூக்க தொடங்கியுள்ளது. நேற்று கோழிக்கோட்டில் மேலும் ஒருவருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து 2 நாட்களுக்கு முன் கோழிக்கோடு வந்த ஒரு பெண்ணுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து கோழிக்கோடு மாவட்ட நிர்வாகம் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.வருபவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. டெங்கு, சிக்குன்குனியா நோய்களை பரப்பும் கொசுக்களால்தான் ஜிகா வைரசும் ஏற்படுகிறது என்றும் ஆனால் இது ஆபத்தானது அல்ல என கூறப்படுகிறது.
ஆனால் இந்த நோய் பாதிப்பு கர்ப்பிணிகளுக்கு ஏற்பட்டால் குழந்தைகள் குறைபாடுடன் பிறக்கலாம் என கூறப்படுகிறது. ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களில் ஐந்தில் ஒருவருக்குதான் அறிகுறிகள் தோன்றுவதாக கருதப்படுகிறது. லேசான காய்ச்சல், கண் சிவத்தல், வீக்கம், தலைவலி, மூட்டு வலி, தற்காலிக பக்கவாதம் ஆகியவை இந்நோயின் அறிகுறிகள் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சுத்தமான தண்ணீரிலேயே இந்த ஏடிஸ் கொசுக்கள் முட்டையிடுகின்றன. எனவே, தண்ணீர் உள்ள பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும் என சுகாதார அதிகாரிகள் ஆலோசனை கூறுகின்றனர்.