இந்திய அணியில் இருந்து நீக்கப்படும் வீரர் : ஜாகீர்கான் சொன்ன கருத்தால் பரபரப்பு
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட வேண்டிய வீரர் யார் என்பது குறித்தான தனது கருத்தை முன்னாள் வீரர் ஜாகீர்கான் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில் 2வது டெஸ்ட் போட்டி நாளை (டிசம்பர் 3) வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது.
இதனிடையே முதல் டெஸ்டில் தேடி வந்த வெற்றியை இந்திய அணி தவறவிட்டது ரசிகர்கள் மற்றும் முன்னாள் இந்திய வீரர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.அணியில் தொடர்ந்து சொதப்பி வரும் புஜாரா, ரஹானே போன்ற சீனியர் வீரர்கள் குறித்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
மேலும் கேப்டன் விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்புவதால் முதல் டெஸ்டில் விளையாடியவர்களில் யார் நீக்கப்பட போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்தவகையில் தனது கருத்தை முன்னாள் இந்திய வீரர் ஜாகீர்கான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் நிலவி வந்த மிடில் ஆர்டர் பிரச்சனை முடிவுக்கு வரும் என நம்புகிறேன். தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டதால் விராட் கோலி நிச்சயம் ஸ்ரேயாஸ் ஐயரை அணியில் இருந்து நீக்கவே மாட்டார் என நினைக்கிறேன்.
புஜாரா மீது அதிக அழுத்தம் ஏற்பட்டும் தொடர்ந்து சொதப்பி வருவதால் அவர் நீக்கப்படலாம் அல்லது தொடக்க வீரர்களில் ஒருவர் நீக்கப்படலாம் என ஜாகீர்கான் கூறியுள்ளார்.