அந்த காரணத்துக்காக யுவராஜ்சிங்கிற்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் - யுவராஜ் சிங் தந்தை கோரிக்கை
தோனியை எப்போதும் மன்னிக்கவே மாட்டேன் என யுவராஜ் சிங்கின் தந்தை கூறியுள்ளார்.
யுவராஜ் சிங்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர்.
2000ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான யுவராஜ்சிங் 304 ஒருநாள் போட்டிகளில் ஆடி 14 சதங்கள், 52 அரைசதங்களுடன் 8,701 ரன்களும், 40 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3 சதங்கள், 11 அரைசதங்களுடன் 1900 ரன்களும் குவித்துள்ளார்.மேலும் டெஸ்டில் 9 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டியில் 111 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். 2019 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
யோகராஜ் சிங்
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் பேசிய யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங், தோனியால் தான் என் மகன் வாழ்க்கை அழிந்துவிட்டது அதனால் அவரை நான் மன்னிக்கவே மாட்டேன் என கூறியுள்ளார்.
மேலும், "தோனி அவரது முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும். மிகப்பெரிய கிரிக்கெட் வீரரான தோனி எனது மகனுக்கு எதிராக என்னவெல்லாம் செய்தார் என்ற எல்லா விஷயமும் தற்போது வெளிவந்து கொண்டு இருக்கிறது. அதை ஒருபோதும் நான் மன்னிக்கவே மாட்டேன்.
தோனி
தோனி எனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையையே அழித்துவிட்டார். யுவராஜ் இன்னும் 4-5 ஆண்டுகள் விளையாடியிருப்பார். யுவராஜ் மாதிரி இன்னொரு வீரர் நமக்கு கிடைக்க மாட்டார்கள் என கவுதம் கம்பீர் மற்றும் வீரேந்தர் சேவாக் கூட பேட்டிகளில் கூறி இருந்தார்கள். புற்றுநோயுடன் ஆடி இந்தியாவிற்காக உலகக்கோப்பையை வென்று தந்த யுவராஜ்சிங்கிற்கு இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.
என்னுடைய வாழ்வில் 2 விஷயங்களை நான் செய்ய மாட்டேன். ஒன்று என்னை ஏமாற்றியவர்களை எப்போதும் நான் மன்னித்ததில்லை. அவர்கள் எனது குடும்பமாக இருந்தாலும் சரி, குழந்தையாக இருந்தாலும் சரி." என பேசியுள்ளார்.
யோகராஜ் சிங் தோனியை விமர்சிப்பது இது முதல்முறை இல்லை. இதற்கு முன் யுவராஜ்சிங் ஐ.சி.சி. தூதராக நியமிக்கப்பட்டபோதும் தோனியை விமர்சித்தார். யுவராஜ் சிங்கிற்கு 2012 ,ஆம் ஆண்டு இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விளையாட்டு விருதான அர்ஜுனா விருது மற்றும் 2014 ஆம் ஆண்டு இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த விருதான பத்மசிறீ வழங்கப்பட்டது