சேலம் கோகுல்ராஜ் ஆவணக்கொலை வழக்கு: குற்றவாளிகள் 10 பேருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை விவரம்
கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகள் 10 பேருக்கும் ஆயுள் தண்டனையும், முதல் இரு குற்றவாளிகளுக்கு மூன்று ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் இவர் கல்லூரியில் தன்னுடன் படித்த நாமக்கல்லை சேர்ந்த மாணவியை காதலித்து வந்த நிலையில்,
கடந்த 2015-ம் ஆண்டு ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், கல்லூரியில் தன்னுடன் படித்த நாமக்கல்லை சேர்ந்த மாணவியை காதலித்து வந்தார்.
இதனை ஏற்கமுடியாத சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் அவரை ஆவணக் கொலை செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டது.
தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக சடலமாக கோகுல்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது நாக்கும் துண்டிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இதனை தொடர்ந்து யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் ஆணவக்கொலை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணை நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், பின்னர் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த விசாரணையில், 106 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 500 ஆவணங்களை விசாரித்து வழக்கின் விசாரணை முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவடைந்தது.
இந்நிலையில், பொறியியல் பட்டதாரி கோகுல் ராஜ் கொலை வழக்கில் யுவராஜ், அருண், குமார், சங்கர், அருள்வசந்தம் செல்வகுமார்,
தங்கதுரை, சதீஸ்குமார், ரகு என்கிற ஸ்ரீதர், ரஞ்சித் ஆகிய 10 பேர் குற்றவாளிகள் என மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் கடந்த 5-ம் தேதி தீர்ப்பளித்தார்.
குற்றச்சாட்டப்பட்டவர்களில் 4 பேர் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்த நீதிபதி, குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை மார்ச் 8-ம் தேதியான இன்று அறிவிப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகள் 10 பேருக்கும் ஆயுள் தண்டனையும், முதல் இரு குற்றவாளிகளுக்கு மூன்று ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முதலாவது குற்றவாளி யுவராஜ் மற்றும் இரண்டாவது குற்றவாளியான யுவராஜின் ஓட்டுனர் அருணுக்கும் மூன்று ஆயுள் தண்டனை என ஆயுள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேலும் 6 பேருக்கு ஒரு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி சம்பத்குமார்.
மேலும் குற்றவாளிகளான பிரபு , கிரிதருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடுதலாக 5 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம்.