நயன்தாரா திரைப்படத்தில் நடிக்கும் பிரபல யூடியூப் குழந்தை - ஆச்சரியத்தில் ரசிகர்கள்
யூடியூப் மூலம் பிரபலமான குழந்தை நட்சத்திரம் ரித்விக் நயன்தாராவின் அடுத்த திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோயம்புத்தூரை சேர்ந்த ரித்விக் ரிது ராக்ஸ் எனும் தனது யூ-ட்யூப் சேனலில் பல கெட்டப்புகளில் நடித்து அசத்தி வருகிறான். ரிப்போர்ட்டர்ஸ் கலாட்டா என செய்திவாசிப்பாளரையும், செய்தியாளரையும் மையப்படுத்திய வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இணையத்தில் வைரலானது. அதில் செய்தி வாசிப்பாளர் சரண்யா, செய்தியாளர் தன்ராஜ், வேல்ராஜ் என வெவ்வேறு கெட்டப்புகளில் சிறுவன் ரித்விக் அதகளம் பண்ணியிருந்தான்.
இந்த வீடியோவை தொடர்ந்து ரித்து ராக்ஸ் சேனலுக்கு சப்ஸ்கிரைபர்கள் குவிய தொடங்க பிரபல ஜவுளி நிறுவனமான போத்திஸின் தீபாவளி விளம்பர மாடலாக மாறினான் ரித்விக். இந்நிலையில் தற்போது நயன்தாரா நடிக்கும் ஓ2 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் ரித்விக் அறிமுகமாகவிருக்கிறான்.
வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனர்களில் ஒருவரான ஜி.கே. விக்னேஷ் என்பவர் இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்தப் படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.