தலைமறைவான 'பப்ஜி' மதன்: தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார்
ஆபாச பேச்சு தொடர்பாக போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் 'பப்ஜி' மதன் என்கிற யூடியூபர் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆன்லைனில் பப்ஜி உள்ளிட்ட பல்வேறு லைவ் வீடியோ கேம்களில் எளிதில் வெல்ல டிப்ஸ் சொல்லித்தரும் 'மதன்' எனும் யு-டியூப் சேனல் அனைவரிடத்திலும் பிரபலம்.
இதனை நடத்தி வந்த மதன் என்கிற இளைஞரின் ஆபாசமான பேச்சுகளுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து "டாக்ஸிக் மதன் 18+" என்ற மற்றொரு யூ-டியூப் சேனலை தொடங்கினார். இதில் பதிவேற்றியுள்ள பல வீடியோக்கள் ஆபாசத்தின் உச்சமாக இருக்கின்றன.
ஆன்லைனில் விளையாடும் சக போட்டியாளர்களை தரக்குறைவான வார்த்தைகளில் திட்டுவதை வாடிக்கையாகவே வைத்திருந்த மதன் பெண்கள் என்றாலும் விடுவதில்லை.
இந்நிலையில் இதுகுறித்து சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி மதனுக்கு புளியந்தோப்பு சைபர் பிரிவு போலீஸார் உத்தரவிட்டிருந்தனர்.
ஆனால் அவர் தலைமறைவாகியுள்ளார். அவரை பிடிக்க காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.