திருமணத்தில் பரிசளிக்கப்பட்ட சிங்க குட்டி - யூடியூபருக்கு கிடைத்த நூதன தண்டனை
சிங்க குட்டியை பரிசாக பெற்ற யூடியூபருக்கு நீதிமன்றம் நூதன தண்டனையை வழங்கியுள்ளது.
சிங்க குட்டி பரிசு
பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல யூடியூபரான ராஜாப் பட்டுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்று உள்ளது. இந்தத் திருமணத்தில் பங்கேற்ற அவரது நண்பரும், யூடியூபருமான ஓமர் டோலா சிங்க குட்டி ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
புதுமண தம்பதிகள் சிங்க குட்டியுடன் உள்ள புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளத்தில் வைரலானது.
நூதன தண்டனை
இந்த வீடியோவை பார்த்த விலங்கு நல ஆர்வலர்கள் இது தொடர்பாக வனத்துறையிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த வனத்துறையினர், ராஜாப் பட் வீட்டிற்கு சென்று சிங்கக்குட்டியை மீட்டு உயிரியல் பூங்காவில் ஒப்படைத்துள்ளனர்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜாப் பட்டுக்கு நூதன தண்டனையை அளித்துள்ளனர். ஒவ்வொரு மாதமும் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் விலங்கு பராமரிப்பு குறித்த 5 நிமிட விழிப்புணர்வு வீடியோவை உருவாக்கி, ராஜாப் பட் தனது யூடியூப் சேனலில் வெளியிட வேண்டும்.
இந்த வீடியோ உருவாக்க தேவையான ஒத்துழைப்பு வழங்குமாறு உயிரியல் பூங்கா நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த சிங்க குட்டியானது தற்போது பாட்டி என பெயரிடப்பட்டு லாகூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகிறது.