YOUTUBE பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள் : போலிஸ் விசாரணையில் பகீர் தகவல்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புளியம்பட்டி என்ற இடத்தில், ஓமலூர் டி.எஸ்.பி சங்கீதா தலைமையிலான போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சேலத்தில் இருந்து இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர். அவர்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகமடைந்த போலிஸார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது.
அதில் ஒரு கைத்துப்பாக்கி, ஒரு பெரிய துப்பாக்கி, பாதி நிலையில் செய்த பெரிய துப்பாக்கி, துப்பாக்கி செய்வதற்கான உதிரிபாகங்கள் முகமூடிகள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவர்கள் இருவரையும் கைது செய்து ஓமலூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் சேலம் எருமாபாளையம் பகுதியை சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி (25), சஞ்சய் பிரகாஷ் (25) என தெரியவந்தது.
மேலும் போலிஸார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் தாங்கள் ஒரு இயற்கை ஆர்வலர்கள் பறவைகளை பாதுகாப்பதற்காகவும் பொது மக்களை பாதுகாக்கவும் யூடியூப் சேனல் மூலம் துப்பாக்கி செய்வது எப்படி என கண்டறிந்து துப்பாக்கிகளை செய்ததாக கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த துப்பாக்கிகள், துப்பாக்கி செய்யும் உதிரிபாகங்கள், முகமூடிகள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் ஆகியவற்றை போலிஸார் பறிமுதல் செய்தும் ஆயுத தடை சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதில் சஞ்சய் பிரகாஷ் பொறியியல் பட்டதாரி எனவும் நவீன் சக்கரவர்த்தி பி.சி.ஏ படித்து உள்ளதாகவும், இந்த இரண்டு பட்டதாரிகளும் சேலம் அருகே உள்ள செட்டிச்சாவடி என்ற ஒரு வனப்பகுதியையொட்டி உள்ள பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து அங்கு துப்பாக்கி செய்து வந்தது தெரியவந்தது.