விஜய்யை பின்தொடர்ந்த இளைஞர்கள்: மருத்துவமனையில் உயிருக்கு போராட்டம்
தஞ்சாவூர் நிர்வாகிகள் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக வந்த விஜய்யின் வாகனத்தை தவெக தொண்டர்கள் பின்தொடர்ந்து சென்றதால் அடுத்தடுத்து விபத்தில் சிக்கி உள்ளனர்.
தஞ்சை
தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளின் சந்திப்பு கூட்டம் இன்று தஞ்சாவூர் அருகே நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து விஜய் தனி விமானம் ஒன்றில் திருச்சி வந்தார்.
அங்கிருந்து விஜய் சாலை வழியாக வேனில் சென்றார். அவரை காண சாலை முழுக்க தவெக தொண்டர்கள் இருந்தனர். சில தொண்டர்கள் விஜயை பார்க்கும் ஆர்வத்தில் விஜய் சென்ற வாகனத்தின் பின்னே பைக்கில் விரட்டி சென்றனர்.

அதில் சிலர் ஹெல்மெட் அணியாமல், சாலை விதிகளை மதிக்காமல் ஆபத்தான முறையில் வேகமாக பின்தொடர்ந்தனர். இதில் சில இளைஞர்கள் விபத்தில் சிக்கி பலத்த காயம் ஏற்பட்டது.
காயப்பட்டவர் உடனடியாக ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காயமடைந்த நபரின் பெயர் விக்னேஷ்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விக்னேஷ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அவரது தந்தை, காலையில் கல்லூரிக்கு செல்கிறேன் என கூறிவிட்டு வந்தான், எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அவனுக்கு வாங்கி கொடுத்துள்ளேன்.
அவன் நண்பர்களிடம் இருந்து பெரிய வண்டி வாங்கி சென்றுள்ளான்.
காலையில் 11.30 மணிக்கு மகனுக்கு விபத்து என்று கேள்விப்பட்டு இங்கே வந்தேன் பார்த்தால் அவன் விஜய்யை பார்க்க சென்றிருக்கிறார் என தெரிய வந்தது.
என்னுடைய மகனுக்கு மூளையில் அடிபட்டுள்ளது. 48 மணி நேரம் கழித்து தான் மருத்துவர்கள் எதையும் சொல்ல முடியும் என கூறி விட்டார்கள்.
என் மகனின் நண்பனுக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டு உள்ளது அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என சொல்லியுள்ளனர் என தெரிவித்தார்.