‘இங்கிலீஷ் பேசினாலும் தமிழன்டா’ - wwe நிகழ்ச்சியில் ஒலித்த தமிழ்
wwe குத்துச்சண்டை போட்டியின் போது தமிழ் மொழியிலான பதாகைகளுடன் இளைஞர் ஒருவர் தோன்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் wwe எனப்படும் பொழுதுப்போக்கு குத்துச்சண்டை போட்டிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதிலும் ஏராளமான கட்டுக்கதைகளும் அவ்வப்போது வதந்திகளாக வருவது வழக்கம்.
இதனிடையே சில தினங்களுக்கு முன் இளைஞர் ஒருவர் தமிழ் மொழி அடங்கிய பதாகைகளுடன் wwe போட்டி ஒன்றின் பார்வையாளர் மாடத்தில் நிற்பது போன்ற புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாக பரவின.
மதுரையைச் சேர்ந்த அஜித்குமார் ராமன் என்ற இளைஞர் அமெரிக்காவில் மருத்துவம் படித்து வருகிறார். இவருக்கு wwe போட்டிகள் என்றால் சிறுவயது முதலே பிடித்தமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துள்ளது.
இந்நிலையில் படிப்புக்காக சென்ற இடத்தில் பொழுதுபோக்கிற்காக குத்துச்சண்டை போட்டிகளையும் காண சென்றுள்ளார். அப்படி சமீபத்தில் காணச் சென்ற போட்டியின் போதுதான் ‘நீங்கள் உங்கள் தாய்மொழியில் பேசுகிறீர்கள்.. நாங்கள் மொழிகளின் தாய்மொழியில் பேசுகிறோம்” என்று தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் அடங்கிய வார்த்தைகளுடன் கூடிய பதாகைகளை கொண்டு சென்றுள்ளார்.
இதன் வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர மிகப்பெரிய அளவில் வைரலாகி பலரின் பாராட்டையும் பெற்று வருகிறது.