நண்பர்களுடன் சேர்ந்து தந்தையை கொலை செய்த மகன் - பொதுமக்கள் அதிர்ச்சி

dindigul fatherkilledbyson
By Petchi Avudaiappan Sep 21, 2021 11:00 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

திண்டுக்கலில் தந்தையை மகனே கொடூரமாக கொலை செய்து விட்டு நாடகம் ஆடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராமம் செட்டியபட்டி ரெயில்வே கேட் அருகே நேற்று முன்தினம் தண்டவாளத்தில் உருக்குலைந்த நிலையில் ஒரு ஆண் சடலம் கிடந்தது.இதுகுறித்து திண்டுக்கல் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்திய போலீசாருக்கு இறந்து கிடந்தவர் முகம் அடையாளம் தெரியாத நிலையில் இருந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதேசமயம் சடலத்தின் அருகே ரத்தக்கறையுடன் 2 உருட்டு கட்டைகளும், பீர் பாட்டில்களும், ஒரு மோட்டார் சைக்கிளும் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் அம்பாத்துரை போலீசாரிடம் உடலை ஒப்படைத்து ரயில்வே போலீசார் விட்டு சென்றனர்.

அங்கிருந்த மோட்டார் சைக்கிள் நம்பரை வைத்து இறந்தவர் வெள்ளோடு கோம்பை பகுதியைச் சேர்ந்த ஜெரால்டு தங்கராஜ் என கண்டுபிடிக்கப்பட்டது. ஜெரால்டு தங்கராஜூக்கு திருமணம் ஆகி ரீத்தா என்ற மனைவியும், கிஷோர்  என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். ரீத்தா கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனிடையே மகன் கிஷோரிடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குபின் முரணான தகவல் அளித்தார். ஆனால் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ஜெரால்டு தங்கராஜ் ரீத்தாவை தனது சிறுவயது முதலே காதலித்து வந்துள்ளார். ஆனால் அவருக்கு திருமணம் செய்து வைக்காமல் முத்தழகுபட்டியைச் சேர்ந்த வேறு ஒரு நபருக்கு குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்து அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இருந்த போதும் ரீத்தாவை மறக்க முடியாமல் இருந்த ஜெரால்டு தங்கராஜ் கைக்குழந்தையுடன் அவரை கடத்தி வந்து 2வது திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவர் தற்போது 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

முதல் குழந்தையான கிஷோரை தனது மகனாகவே வளர்த்து வந்த நிலையில்,12 ஆம் வகுப்பு வரை படித்த கிஷோர் அதன்பிறகு கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அதேசமயம் ஜெரால்டு தங்கராஜ் வேலைக்குச் செல்லாமல் சேவல் சண்டை, சீட்டாட்டம் என்று இருந்து வந்துள்ளார். தனது தாய் இறப்பதற்கு முன்பாக தான் வேறு ஒருவருக்கு பிறந்த விபரம் கிஷோருக்கு தெரிய வந்தது.

இதற்காக அரசிடமிருந்து வந்த ரூ.1.10 லட்சத்தையும் குடித்துவிட்டு சீட்டாடி செலவழித்தோடு மட்டுமல்லாமல் கிஷோர்  வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தை பறித்துக் கொள்வாராம்.இதனால் தனது தந்தையை தீர்த்து கட்ட ஆறுமுக பாண்டி மற்றும் ஆபீஸ் என்ற பிராங்கிளின் நண்பர்களுடன் சேர்ந்து அவர் திட்டம் தீட்டினார்.அதன்படி கோவையில் வேலை பார்த்த கிஷோர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். தனது நண்பர்களுடன் கலந்து பேசி தந்தையை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.

தனது திட்டத்தின் படி தான் ரெயில்வே கேட்டில் நிற்பதாகவும், மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வருமாறும் தந்தையிடம் போனில் தெரிவித்துள்ளார். அதனை நம்பி ஜெரால்டு தங்கராஜ் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.அங்கு ஏற்கனவே மறைந்திருந்த கிஷோர் மற்றும் அவரது நண்பர்கள் உருட்டுக்கட்டை மற்றும் பீர் பாட்டிலால் அவரை தாக்கி கொன்று பின்னர் 20 அடி தூரத்தில் இருந்த தண்டவாளத்தில் உடலை வீசி சென்று விட்டனர்.

சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தியதில் அங்கிருந்த தடயங்கள் கிடைத்தன.மேலும் ஜெரால்டு தங்கராஜ் பயன்படுத்திய செல்போன் உரையாடல்களும் இந்த கொலைக்கு முக்கிய துருப்புச்சீட்டாக அமைந்தது.கொலை செய்துவிட்டு எதுவும் தெரியாதது போல கிஷோர் வழக்கமாக மறுநாள் வேலைக்கு சென்று வந்துள்ளார். அவரது உடலை கிஷோர் மற்றும் பாட்டி சம்பூர்ணம் ஆகியோர் அடையாளம் காட்டினர்.

தனது தாயை கடத்தி வந்து திருமணம் செய்து தன்னை கொடுமைபடுத்தியதால் கிஷோர் இந்த கொடூர கொலை செய்தது தெரிய வந்துள்ளது. தந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மகன், கிஷோர் நண்பர்கள் ஆறுமுக பாண்டி மற்றும் ஆபீஸ் என்ற பிராங்கிளின் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.