வாட்ஸ்அப்பில் வீடியோ அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை - பொதுமக்கள் அதிர்ச்சி
செங்கல்பட்டு அருகே சென்னையைச் சேர்ந்த வாலிபர் குடும்ப தகராறு காரணமாக விஷம் குடித்து தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த குன்னத்தூர் ஏரிக்கரை பகுதியில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் சதுரங்கப்பட்டினம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இதில் இறந்துபோனவர் சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பது தெரிய வந்தது. இவருக்கும் ராமாபுரத்தை சேர்ந்த கல்பனாவுக்கும் 2011 ஆம் ஆண்டு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த ஆறு மாத காலமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனிடையே நேற்று ராஜேஷ் தனது மனைவியை தன்னுடன் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் கல்பனா மறுக்கவே ஆத்திரமடைந்த ராஜேஷ் பைக்கில் கல்பாக்கம் அடுத்த குன்னத்தூர் ஏரிக்கரை பகுதிக்கு வந்துள்ளார்.
அங்கு வாட்ஸ்அப் மூலம் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி மனைவி கல்பனாவுக்கு வீடியோ ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். முதலில் எலி மருந்து குடித்தும், பின்னர் பெட்ரோல் ஊற்றி தனக்கு தானே தீ வைத்துக் கொளுத்தி கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அதன்பின் தான் சாலையில் சென்ற பொதுமக்கள் எரிந்த நிலையில் கிடந்த ராஜேஷை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சதுரங்கப்பட்டினம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.