ஒரே பைக்கில் பயணித்த 4 இளைஞர்கள்: லாரி மீது மோதியதில் பரிதாபமாக பலி!
திருப்பூர், பெருமாநல்லூர் அருகே பழுதடைந்து நின்ற லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியலில் அதில் பயணித்த 4 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பெருமாநல்லூரைச் சேர்ந்தவர் சபரி பாலமுருகன் (25). இவரும் பிரவீன்(24), ஆனந்த் (26) பாலமுருகன் (23) ஆகியோரும் நண்பர்கள்.
இவர்கள் அனைவரும் பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் 4 பேரும் நேற்று நள்ளிரவு ஒரே இரு சக்கர வாகனத்தில், பெருமாநல்லூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்தனர்.
அப்போது ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி, ராக்கியாபட்டி அருகே சென்றபோது, ஆந்திராவிலிருந்து கேரளாவுக்கு சரக்கு ஏற்றிச் சென்ற லாரி பழுதடைந்து நின்று கொண்டிருந்தது.

அப்போது இவர்கள் பயணம் செய்த இரு சக்கர வாகனம் வேகமாக வந்து லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இதில் சபரி பாலமுருகன், ஆனந்த் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த பாலமுருகன் மற்றும் பிரவீன் ஆகியோரைப் பொதுமக்கள் மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.