திருமணம் நடக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை
ஹைதராபாத்தில் 39 வயதாகியும் திருமணம் நடக்காத விரக்தியில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் சாரி என்ற 39 வயது நபர் பொற்கொல்லராக வேலை செய்து வந்தார். வேலை செய்யும் இடத்திற்கு அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கிவந்த ஶ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை இரவு தெளிவற்ற நிலையில் வீட்டிற்கு வந்திருக்கிறார்.
அவரால் நடக்க முடியாததால் வீட்டின் உரிமையாளர் அவருக்கு உதவியிருக்கிறார். அதன்பின் தனது சகோதரிக்கு செல்போனில் அழைத்துப் பேசிய அவர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்டு பதற்றமடைந்த ஸ்ரீகாந்தின் சகோதரி வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசாரிடம் 39 வயதாகியும் தனக்கு திருமணம் நடக்காததால் விரக்தியில் உள்ளதாக அவர் செல்போனில் கூறியபிறகு தற்கொலை செய்துள்ளார் என அவருடைய சகோதரி வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது.