நண்பனுக்காக தற்கொலைக்கு முயன்ற இளைஞர் - திடுக்கிட வைக்கும் பின்னணி
கடலூர் அருகே காதல் தோல்வியால் நண்பன் தற்கொலை செய்து கொண்ட வருத்தத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பனங்காட்டு நகர் பகுதியில் வசிக்கும் வீரவேலு ஒரு தலை காதல் தோல்வி காரணமாக மனமுடைந்து இரண்டு நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறையினருக்கு எந்த தகவலையும் கொடுக்காமல் சடலத்தை பெற்றோர்கள் வீட்டிலேயே வைத்துள்ளனர்.
இதனிடையே வீரவேலு இறந்த துக்கம் தாங்காமல் மனமுடைந்த அவரது நண்பர் சூர்யமூர்த்தி என்பவரும் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்த வந்த போது, வீரவேலு விவகாரம் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து வீரவேலுவின் வீட்டிற்கு போலீசார் சென்றனர். அவரது குடும்பத்தாரிடம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் எப்படி உடலை அடக்கம் செய்கிறீர்கள்? என போலீசார் கேள்வி எழுப்ப இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இறுதியாக அதன்பிறகு போலீசார் சடலத்தை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.