காதலியை அடித்துக் கொன்ற மாணவருக்கு ஆயுள் தண்டனை - கரூரில் பரபரப்பு

karur youthkilledhislover
By Petchi Avudaiappan Feb 01, 2022 05:00 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

கரூரில் கல்லூரி மாணவியை கட்டையால் அடித்துக் கொன்ற மாணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.  

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆதியனேந்தலை சேர்ந்தவர் பெரியசாமி மகன் உதயகுமார் என்பவர் கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார்.  இவர் அதே கல்லூரியில் படித்த மதுரை சேர்ந்த சோனாலி என்ற மாணவியை காதலித்து வந்துள்ளார்.

இதற்கிடையில் உதயகுமார் கல்லூரிக்கு சரிவர வராததால் கல்லூரி நிர்வாகம் அவரை தேர்வெழுத அனுமதிக்காததால் சோனாலி உதயகுமாருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் வருடம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி கல்லூரி சீருடையில் உருட்டுக் கட்டையுடன் கல்லூரியில் உள்ள சோனாலி வகுப்பறைக்கு நுழைந்த உதயகுமார் அவரை உருட்டுக்கட்டையால் கடுமையாக தாக்கினார். அப்போது தடுக்க வந்த பேராசிரியர் சதீஷ்குமாரை தாக்கியதோடு மிரட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டார்.

இதையடுத்து மாணவியை கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்கு மதுரை அழைத்து செல்லும் வழியில் சோனாலி உயிரிழந்தார். இதுதொடர்பாக கரூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து உதயகுமாரை கைது செய்தனர். இவ்வழக்கில் கரூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு இன்று தீர்ப்பளித்தார். 

அதில் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக 10 ஆண்டு, ரூ.10,000 அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாத சிறை, ஆபாசமாக திட்டியதற்காக 3 மாத சிறை, ரூ.1,000 அபராதம் கட்டத் தவறினால் மேலும் 15 நாள் சிறை, கட்டையால் தாக்கியதற்காக 2 ஆண்டு சிறை, ரூ.1,000 அபராதம், கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறைத் தண்டணை விதிக்கப்பட்டது.

மேலும் கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனை, ரூ.10,000 அபராதம் கட்டத்தவறினால் மேலும் 3 மாத சிறை, கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டு சிறை, ரூ.1,000 அபராதம் கட்டத்தவறினால் மேலம் 3 மாத சிறைத்தண்டனை எனவும் இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

அபராதத்தொகையில் ரூ.23,000 மாணவியின் தாயாருக்கு இழப்பீடாக வழங்கவும், பெண்ணின் தாயாருக்கு இழப்பீடு வழங்க இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் அரசுக்கு பரிந்துரை செய்யவும் உத்தரவிடப்பட்டது.