“குத்துனதே நண்பன் தான்” - பப்ஜியால் நேர்ந்த கொடூரம்
பப்ஜி விளையாட்டில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த நாச்சிகுளம் பகுதியை சேர்ந்த நாகூர்பிச்சை என்பவரது மகன் இஸ்மத் டிப்ளமோ படித்துள்ளார். இவர் நேற்றிரவு மன்னார்குடி ஆர்.பி.சிவம் நகர் அருகே ஆள்நடமாட்டமில்லாத பகுதியில் காயத்துடன் சாலையோரத்தில் பிணமாக கிடந்ததை கண்ட அவ்வழியாக சென்ற மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி டி.எஸ்.பி இளஞ்செழியன் மற்றும் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் ஆகியோர் இஸ்மத்தின் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்தனர்.
இதில் பப்ஜி விளையாடுவதில் நண்பர் ஒருவருடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இஸ்மத் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.இஸ்மத்திற்கும், அவரது நண்பர் வாஜித்துக்கும் பப்ஜி விளையாட்டின் போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்துள்ளது.
இதையடுத்து வாஜித் சமாதானம் பேசலாம் எனக் கூறி இஸ்மத்தை அழைத்துள்ளார். இதனை நம்பிய இஸ்மத் மன்னார்குடி ஆர்.பி.சிவம் நகர் அருகே ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் வாஜித் மற்றும் வாஜித்தின் நண்பர்கள் தீன்ஹனீஸ், மர்ரூஜ், அக்பர்பாஷா ஆகியோரை சந்தித்துள்ளார். அப்போது இஸ்மத்துக்கும், வாஜித்திற்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது வாஜித்தின் நண்பர்கள் இஸ்மத்தை குத்திக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவானது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளைத் தேடி வருகிறனர்.