மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட நண்பர் - கடத்தி கொலை செய்த நபர்
சேலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் வாடகை டாக்சி கார் உரிமையாளரை கர்நாடகா கடத்திச்சென்று கொலை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே எம்ஜிஆர் காலனி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் . இவர் சொந்தமாக கார் வைத்து, வாடகை டாக்சி ஓட்டி வந்தார். இவரது மனைவி பெயர் வெண்ணிலா . இதனிடையே கடந்த 16ஆம் தேதி ரமேஷ், அவரது மனைவி வெண்ணிலாவிடம் கார் ஒன்று வாங்குவதற்காக வெளியூர் சென்று வருகிறேன் என தெரிவித்து சென்றார். ஆனால் ரமேஷ் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த வெண்ணிலா ரமேஷின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார் ஆனால் செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த வெண்ணிலா தனது உறவினர்களுடன் தாரமங்கலம் காவல் நிலையம் சென்று தனது கணவர் மாயமானது குறித்து புகார் செய்தார் இந்த புகார் மனுவை அறிந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் ரமேஷ் குறித்து துப்பு துலக்க தனிப்படை அமைத்தார்.
தாரமங்கலம் காவல் ஆய்வாளர் தொல்காப்பியன் மற்றும் ஓமலூர் காவல் ஆய்வாளர் குமார் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணை செய்துவந்தனர். இதனிடையே தனிப்படை போலீசார் தமிழகம் கர்நாடகம் ஆந்திரா ஆகிய காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ரமேஷின் புகைப்படத்தை அனுப்பி இவரைப் போல் யாரும் இறந்துள்ளனரா? அப்படி இருந்தால் தகவல் தெரிவிக்கவும் என கேட்டுக் கொண்டிருந்தனர் .
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் நில மங்களா என்ற ஊரில் உள்ள காவல் நிலைய போலீசார் தங்களது ஊரில் உள்ள ஏரியில் சடலமொன்று பெரிய கல்லால் கட்டி வீசப்பட்டிருந்ததையும், இதனையடுத்து அந்த சடலத்தை எடுத்து பிரேத பரிசோதனை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உடனே தாரமங்கலம் தனிப்படை போலீசார் நில மங்களா சென்றனர். அங்கு அவர்கள் வைத்திருந்த புகைப்படங்கள் மற்றும் சடலத்திலிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களான கையில் கட்டப்பட்டிருந்த மணி கயிறு, மற்றும் ஆடைகளை காண்பித்துள்ளனர் . அது மாயமான ரமேஷ் என தெரியவந்தது.
பின்னர் ரமேஷின் உறவினர்கள் நில மங்களா அழைத்துச் செல்லப்பட்டனர் அவர்களும் ஏரியில் இறந்து கிடந்தது ரமேஷ் என உறுதி செய்தனர். ரமேஷ் கொலை செய்யப்பட்டு சடலத்தை ஏரியில் வீசி இருப்பது தெரிய வந்தது. இதன் பின்னர் தனிப்படை போலீசார் தாரமங்கலம் விரைந்து வந்து ரமேஷின் நண்பர்கள் சிலரை பிடித்து விசாரித்தனர் இதில் சேகர் என்பவர் முன்னுக்குப்பின் முரணாக உளறியுள்ளார்.
பின்னர் சேகரின் செல்போனை எடுத்து பார்த்துள்ளனர் அதில் 16ஆம் தேதி சேகரும் ரமேஷ் நீண்ட நேரம் செல்போனில் பேசியிருப்பது தெரியவந்தது. ஆனால் இதுகுறித்து சேகர் ஏதும் கூற மறுத்து விட்டார். பின்னர் சந்தேகம் அதிகமான போலீசார் தங்களது பாணியில் சேகரை விசாரித்துள்ளனர் அப்போது சேகர் உண்மையை ஒப்புக்கொண்டார்.இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து.