செல்போனில் பாடல் கேட்டபடி தண்டவாளத்தில் நடந்து சென்ற இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்...
வாணியம்பாடியில் செல்போனில் பாடல் கேட்டபடி தண்டவாளத்தில் நடந்து சென்ற இளைஞர் விரைவு ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோணமேடு பகுதியை சேர்ந்த அஜீத் என்ற 25 வயது இளைஞர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சொந்த ஊரான வாணியம்பாடிக்கு அஜீத் வந்துள்ளார்.
இன்று அவருடைய வீட்டின் அருகே உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது தன்னுடைய செல்போனில் இயர் போன் பொருத்தி பாடல் கேட்டவாறு தண்டவாளத்தில் நடந்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னையிலிருந்து கோவை நோக்கி சென்ற விரைவு ரயில் அஜீத் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த
ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.